ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

செல்வந்தர் ஆவதற்கான அறிவியல் | The Science of Getting Rich

 அறிவு + இயல் = அறிவியல்

இயல் உலகு மற்றும் இயற்கை விதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதன் மூலம் கிடைக்கப்பெறும் அறிவு.
(The study of and knowledge about the physical world and natural laws.)

உங்கள் பள்ளிக்கூட வகுப்பில் கணிதப் பாடம் படித்தது நினைவிருக்கிறதா ? ஒரு குறிப்பிட்ட கணித சூத்திரத்தின்(formula) படி நீங்கள் கணக்கிடும்போது உங்களிடம் கேட்கப்பட்ட கணிதவியல் தொடர்பான கேள்விக்கான பதிலை உங்களால் எளிதில் பெற முடிந்தது அல்லவா ?
அதேபோல்தான் செல்வந்தராவதற்கும் ஒரு சூத்திரம் இருக்கிறது. இந்த அறிவுரைகளை நீங்கள் அறிவாக பெற்றுக் கொண்டும் செல்வந்தர் ஆவதற்கான செயல்பாட்டின் விதிகளைப் புரிந்து கொண்டும் செயல்பட்டால் நிச்சயம் நீங்களும் செல்வந்தர் ஆகலாம்.

என்ன செல்வந்தர் ஆவதற்கு ஒரு அறிவியல் இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா ? ஆமாம் இருக்கிறது.

எப்படி ஒரு மனிதன் செல்வந்தர் ஆகிறான் ? அவன் மற்றவர்களைவிட வேறு விதமான செயல்களைச் செய்கிறான் அதனால் தான் அவனால் செல்வந்தனாக முடிகிறது.

பால்கோவா செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு இளம்பெண் அதை செய்ய முயல்கிறாள் சரியாக வரவில்லை ஒரு நாள் தன் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த போது அவள் சுவையான பால்கோவாவைச் செய்திருந்தாள் இப்போது அப்பெண் தன் தோழியிடம் என்ன கேள்வி கேட்டிருப்பாள் ?
"இதை எப்படிச் செய்தாய் ?" என்றுதானே ?

எல்லோரும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி செயல்களைச் செய்வதில்லை. செல்வந்தர்கள் வேறு விதமான செயல்களைச் செய்கிறார்கள் அதுதான் அதீத செல்வத்தை குவிப்பதற்கான முக்கிய காரணம். இச்செயல்களை தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் விளைந்து தான் ஆகும், இப்புத்தகத்தின் மூலம் அச்செயல்களை எப்படிச் செய்யலாம் என்கிற அறிவை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

சரி செல்வந்தர்கள் செய்யும் அந்த விந்தையான செயல்தான் என்ன ? ஒருவேளை செல்வச்செழிப்பான நகரத்துக்கு குடிபெயர்வதாக இருக்கலாமோ ?

இல்லை அப்படி இருந்தால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வசிக்கும் அனைவருமே செல்வந்தராகத்தான் இருக்க முடியும். ஆனால் இங்கே நிலைமை அப்படியல்ல செல்வந்தர்கள் வாழும் அதே நகரத்தில் ஏழைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் மாட மாளிகைகள் நிறைந்திருக்க இன்னொரு புறம் குடிசைகளும் இருக்கத்தானே செய்கிறது.

ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நூதனமான தொழிலில் ஈடுபடுவதால் செல்வந்தர்கள் அதிகம் செல்வத்தைச் சேர்க்கிறார்களோ ?

இல்லை ஒரே தொழிலில் ஈடுபடும் இருவரில் ஒருவர் வெற்றி பெறுகிறார் மற்றவர் வெற்றி பெற முடிவதில்லை.

இதுமாதிரப் பல காரணங்களை எடுத்து ஆராயலாம் ஆனால் உண்மையில் இவை அனைத்தையும் தாண்டிச் செல்வந்தர்கள் செய்யும் அந்த வேறுபட்ட செயல்பாடுகளே அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்குகிறது, இக்கருத்தை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் அது இதுதான் நீங்களும் செல்வந்தராக வேண்டுமென்றால் செல்வந்தர்களைப்போல நீங்கள் செய்யும் செயல்கள் வேறு பட்டதாக இருக்க வேண்டும்.

சனி, 22 ஆகஸ்ட், 2020

நீங்கள் ஏன் செல்வந்தர் ஆக வேண்டும்? Why You Should become Rich? | Tamil Motivation

 



நீங்கள் ஏன் செல்வந்தராக வேண்டும்?

"எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்து கொண்டே செல்ல வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய நோக்கம்"

செல்வந்தனாக இருப்பது ஒரு மனிதனுக்குச் சுதந்திரத்தை கொடுக்கும். ஒரு மனிதன் தான் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பொழுது அந்த முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்தையும் செய்யும் ஆற்றலைக் கொடுப்பது செல்வமே.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் உரிமை இருக்கிறது, அது அவனுடைய உடல் மனம் மற்றும் ஆன்ம வளர்ச்சிகளை எந்த அளவுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைக்கிறானோ அந்த அளவுக்கு எடுத்துச் செல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது.
இதுவே உண்மையான செல்வமாகும்.

இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் செல்வந்தராகும் உரிமை உள்ளது, ஆம் செல்வந்தராவது உங்கள் பிறப்புரிமை .

உலகம் மிகப் பெரிய மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறது மிகப்பெரிய வளர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இக்காலகட்டத்தில் ஒரு மனிதன் முழுமை பெறாமல் இருப்பது போன்ற ஓர் உணர்வுடன் சுற்றிக்கொண்டிருப்பதற்கான காரணம் செல்வம் இல்லாமையே.

நீங்கள் பிறக்கும் போதே ஆக்கப்பூர்வமான ஒரு விதை உங்களுக்குள் வைக்கப்படுகிறது.



இந்த விதையானது விருட்சமாக வளர வகை தேடிக்கொண்டிருக்கும்.
நீங்கள் எப்பொழுதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா ?
உங்கள் மனம் "நான் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும், நான் ஏதாவது ஒன்றாக மாற வேண்டும்" என்று உங்களுக்குள் ஒரு எண்ணத்தையோ யோசனையோ கொடுத்திருக்கும், இதை நீங்கள் உணர்ந்து இருந்தால் இதுதான் அந்த விதையானது தன்னை வெளிக்கொணரச் செய்யும் முயற்சியாகும்.

உங்களால் ஏன் அந்த யோசனைக்குச் செயல் வடிவம் கொடுக்க முடியவில்லை ? நீங்கள் யோசித்ததுண்டா ? யோசித்திருந்தால் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். உங்களிடம் உங்கள் யோசனையைச் செயலாக்கம் கொடுப்பதற்கு பணமோ நேரமோ காலமோ சூழலோ இல்லை என்று உங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்.
நீங்கள் நினைத்ததைச் செய்ய உதவும் ஓர் அடிப்படைக் கருவிதான் செல்வம் நீங்கள் செல்வந்தராக இருந்திருந்தால் உங்கள் எண்ணங்கள் என்றோ செயல் வடிவம் எடுத்திருக்கும் அல்லவா ? ஆகவேதான் நீங்கள் செல்வந்தராக வேண்டும் என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் வாழ்வதற்கான மூன்று முக்கிய ஆதார நோக்கங்கள்
1 நீங்கள் உங்கள் உடலுக்காக வாழ்கிறீர்கள்
2 உங்கள் மனதுக்காக வாழ்கிறீர்கள்
3 ஆன்மீக நோக்கத்திற்காக வாழ்கிறீர்கள்

இதில் ஏதோ ஒன்றுக்காக மட்டும் வாழ்வது முழுமையான வாழ்க்கை அல்ல, நீங்கள் ஒரு முழுநேர ஆன்மீகத் தேடலில் ஈடுபடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் உங்களுடைய உடலையும் மனதையும் சரியாகப் பயன்படுத்தாமல் நீங்கள் முழுநேர ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. அதே போல உங்கள் மனம் விரும்பும் ஏதோ ஒரு இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மற்ற இரண்டையும் ஒதுக்கிவிட்டு மனம் போகும் போக்கில் மட்டும் வாழ்ந்து விடவும் முடியாது. எப்பொழுது ஒரு இலக்கில் இந்த மூன்றையும் சிறப்பாகப் பயன்படுத்துகிறீர்களோ அப்பொழுது உங்கள் வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்கும்.

இவை அனைத்தையும் சிறப்பாகச் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தான் செல்வந்தர்.

நீங்கள்தான் செல்வச்செழிப்பு மிக்க நபர்.

உங்களைச் செல்வந்தர் ஆக்குவதற்கான அறிவுரைகளுக்கு நீங்கள் ஏன் அதிக கவனத்தை கொடுக்க வேண்டுமென்றால் இது ஏதோ பணம் சம்பாதிக்க கூறும் அறிவுரைகள் மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையை முழுமை அடையச் செய்வதற்கான அறிவுரைகளை இந்தப் புத்தகத்தின் வழியே நாம் பார்க்க போகிறோம்.

ஆகவே இந்த அறிவுறைகளை உணர்ந்து கொள்வதற்கு எந்த அளவுக்கு கவனத்தைக் கொடுக்க முடியுமோ அவை அனைத்தையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்...